நரை முடியை இயற்கையாகக் கருமையாக்குவதற்கான வழிகள்: இந்தப் பதிவில், 5 எளிமையான வைத்தியங்களை கொண்டு, நரை மற்றும் வெள்ளை முடியை எப்படி கருமையாக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நம் அழகு மற்றும் ஆளுமையின் முக்கியமான அங்கம் தலைமுடி தான். நீண்ட, உறுதியான, அடர்த்தியான பளபளப்பான முடியைப் பெறவே அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் தற்போது வெள்ளை மற்றும் நரை முடி பிரச்சனை பலரிடமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயதிலேயே மோசமான, வயதான தோற்றத்தை தருகிறது. இதனால் அழகும் பாதிக்கப்படுகிறது. தலைமுடியை பராமரிக்கப் பல்வேறு இரசாயனங்களால் ஆன ஹேர் கேர் புராடக்டுகளை பயன்படுத்துகின்றனர். இரசாயன எண்ணெய்கள், ஷாம்புகள், ஹேர் டைகள், கலர்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவது நரை முடிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், மாசுபாடு, முறையற்ற உணவு முறை, தலைமுடிக்கு எண்ணெய் தடவாமல் இருப்பது, தலைமுடியை பராமரிக்கத் தவறுதல், உடலில் உண்டாகும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்களாலும் நரை முடி பிரச்னை ஏற்படுகிறது.
நரை மற்றும் வெள்ளை முடியைக் கருமையாக்க நீங்கள் பயன்படுத்தும் கலரிங், ஹேர்டை போன்றவை சில காலத்திற்கு மட்டுமே தீர்வாக அமைகிறது. மேலும், அவற்றின் அதிகப்படியான பயன்பாடு தலைமுடிக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது. நரை முடியை இயற்கையாகக் கருப்பாக்க என்ன செய்யலாம் அல்லது நரை முடியைக் கருப்பாக்குவது எப்படி? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். விடையை 5 எளிய வழிகளாக நாங்கள் உங்களுக்கு இந்தப் பதிவில் வழங்குகிறோம்.
நரை முடியைக் கருமையாக்க 5 வழிகள்
உடலின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குங்கள்
பெரும்பாலும் முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஊட்டச்சத்து குறைப்பாடே முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே சத்தான மற்றும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதை மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளலாம், தேவைப்பட்டால் மாத்திரைகளை பரிந்துரைக்கும்படியும் அவரிடம் கேட்கலாம்.
பித்த தோஷம் சமநிலையற்றதாக ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
உடலில் உள்ள பித்த தோஷத்தின் சமநிலையின்மையால் நரை முடி மட்டுமின்றி பல தலைமுடி பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. நீங்கள் அதிக கவலை அல்லது மன அழுத்தத்திற்கு ஆளானால், வெயிலில் அதிக நேரம் கழித்தால், புகைபிடித்தால் மற்றும் மது அருந்தினால், அத்துடன் தேவையற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்பவராக இருந்தால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை அனைத்தும் பித்த தோஷத்தை அதிகரிக்கும். ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொண்டு தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பித்த தோஷத்தை சமநிலைப்படுத்தலாம்.
வெங்காயச் சாறை முடிக்குத் தடவலாம்
முதலில் வெங்காயச் சாறை கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் வதக்கிக்கொள்ளுங்கள். எண்ணெய் ஆறிய பின்பு உச்சந்தலையிலிருந்து தலைமுடியின் நுனி வரை தடவுங்கள். இப்படி வாரத்திற்கு 2-3 முறை தடவினால், படிப்படியாக நரைமுடி பிரச்சனை நீங்கும்.
தலைமுடிக்கு நெல்லிக்காய் ஹேர் மாஸ்க் அல்லது ஹேர் பேக்கை தடவலாம்
கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த ஹேர் மாஸ்க் மற்றும் பேக்குகள் நன்மையைவிட அதிக தீங்குகளையே விளைவிக்கும். இதற்கு மாற்றாக, இயற்கையான முறையில் நெல்லைக்காயில் செய்த ஹேர் மாஸ்க் மற்றும் பேக்குகளை பயன்படுத்துவதால், தலைமுடி ஆரோக்கியமாகவும், இயற்கையாகவே கருப்பாகவும் மாறும். நெல்லிக்காய் பொடி அல்லது நசுக்கிய முழு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காயின் சாறு எடுத்துத் தலைமுடிக்குப் பயன்படுத்தக்கூடிய ஏதேனும் ஒரு எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறவிடவும்.ஆறிய பிறகு, அதை ஒரு ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம் அல்லது தலைமுடியில் தடவி 4-5 மணிவரை வைத்திருக்கலாம்.
மருதாணியைப் பயன்படுத்துங்கள்
செயற்கை கலர் மற்றும் டையை விடப் பாதுகாப்பானது மருதாணி. கடுகு அல்லது தேங்காய் எண்ணெயில் 2-3 ஸ்பூன் மருதாணி பொடி அல்லது இலைகளைச் சேர்த்து, மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். கலவை கருப்பு நிறமாக மாறியதும், அடுப்பை அணைத்து, ஆற விடவும். இதனைத் தடவி 4-5 மணி நேரத்திற்கு பிறகு தலை முடியை அலசவும். வாரத்திற்கு 2-3 முறை இவ்வாறு செய்யலாம்.
image source: freepik