பொதுவாக, PCOS உள்ளவர்களுக்கு முகப்பரு, சருமவெடிப்பு மற்றும் எரிச்சல் போன்ற தோல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியமான பளபளப்பான சருமத்திற்கு இந்த வழக்கங்களைப் பின்பற்றலாமே.
நீங்கள் PCOS நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களின் சரும பிரச்சனைகளால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கலாம். பெரும்பாலும் முகப்பரு, சருமவெடிப்புகள் மற்றும் மோசமான தோல் அமைப்புகள் போன்ற சரும பிரச்சனைகள் உங்கள் கண்ணுக்குப் புலப்படும். இந்த அறிகுறிகள் தோல் பராமரிப்பு வழக்கத்திற்கான தேவையை உணர்த்துகின்றன. இந்தத் தோல் பராமரிக்கும் வழக்கங்களைத் தோல் மருத்துவரின் வழிநடத்தலின் கீழ் பின்பற்ற வேண்டியது அவசியம். டாக்டர் ஷைல்யா குப்தா, (MBBS, MD, தோலியல் தலைமை நிபுணர்), சிக்னூட்ரிக்ஸில் உள்ள தோல் மருத்துவர், PCOS உள்ள பெண்களுக்கான சிறந்த தோல் பராமரிப்பு வழக்கங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தோல் மருத்துவர் ஒரு சில மருந்துகளைப் பரிந்துரை செய்தாலும், PCOS இன் அடிப்படைக் காரணங்களை கண்டறிவதும், குறிப்பிடத் தக்க வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டியதும் அவசியம். உடல் எடையைக் குறைத்தல், உடல் வலுக்கான பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்திற்காக நீங்கள் எவ்வளவு நேரம் முயற்சி செய்தாலும், PCOS இன் அடிப்படை காரணங்களை கண்டறிய இயலாது.
அடுத்து, உங்கள் சருமத்தைப் பற்றிய புரிதலுக்கு, ஒரு தோல் மருத்துவரை அணுகுங்கள். உங்கள் அறிகுறிகளுக்கான அடிப்படை காரணத்தை அவரால் கண்டறிய முடியும்.
உதாரணமாக, உங்கள் கீழ்தாடையை சுற்றியுள்ள பகுதியில் முகப்பரு ஏற்படலாம், சில சமயங்களில் இவை கடுமையானதாகவும் இருக்கலாம். முடி உதிர்தலுடன், அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் (Acanthosis Nigrican) என்றழைக்கப்படும் மென்மையான அதிநிறமேற்ற தோல் மாற்றங்களைக் கழுத்து, கழுத்தின் முனை அல்லது அக்குள் பகுதிகளில் பார்க்கலாம். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் சருமம் இயல்பைவிடக் கருமையான நிறத்தில் காணப்படும்.
PCOS இல் முகப்பரு
உங்கள் தோல் மருத்துவரை ஆலோசித்து, முகப்பருக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபிறகு, அடிப்படை தோல் பராமரிப்பு வழக்கத்தின் மூலமாக உங்கள் முகப்பருவை அதிகமாகமல் கட்டுக்குள் கொண்டுவர முடியும். உங்களுக்குச் சமீபத்தில் முகப்பரு ஏற்பட்டு இருந்தால், காலையில் முகப்பரு சிகிச்சை ஜெல்கள் அல்லது கிரீம்கள் பயன்படுத்துவதற்கு முன் சாலிசிலிக் ஆசிட் க்ளென்சர் பயன்படுத்தி முகத்தைச் சுத்தம் செய்யவும். அடுத்து வழக்கமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள், அதைத் தொடர்ந்து சன்ஸ்கிரீனைப் பூசிக்கொள்ளலாம்.மிக முக்கியமாக நீங்கள் தேர்வு செய்யும் முக பராமரிப்பு தயாரிப்புகள் முக துளைகளை அடைக்காத தன்மை (non-comedogenic) கொண்டதாக இருக்க வேண்டும்.
பலருக்கு தங்களின் சருமம் எண்ணெய் பசையாக இருப்பதால் அல்லது முகப்பருவுக்கு ஆளாவதால், சரும் பராமரிப்புகள் தேவையில்லை என்ற தவறான கருத்து மனதில் நிலவி வருகிறது. இது உண்மையல்ல. உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தாலும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்க நீர்-சார்ந்த(water based) மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் முகப்பருவின் தீவிரத்தை பொறுத்து, உங்கள் தோல் மருத்துவர் இரவில் பயன்படுத்த, ரெட்டினாய்டு கிரீம் அல்லது ஜெல்லை பரிந்துரைக்கலாம். எனவே, சாலிசிலிக் ஆசிட் க்ளென்சர், ரெட்டினாய்டு க்ரீம் அல்லது ஜெல் மற்றும் மாய்ஸ்சரைசர் ஆகியவை உங்கள் இரவுநேர தோல் பராமரிப்பு வழக்கத்தில் வரிசையாகப் பின்பற்றப்பட வேண்டியவை.
PCOS இல் கருமை நிறமடைதல்
அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ்(Acanthosis Nigrican) என்றழைக்கப்படும் கழுத்து, அக்குள் அல்லது பிறப்புறுப்புகளில் ஏற்படும் மென்மையான அதிநிறமேற்ற தோல் மாற்றம், PCOS நோயாளிகளுக்கு எப்போதாவது ஏற்படலாம். இது இன்சுலின் எதிர்ப்பு காரணத்தால் ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் மருத்துவரைச் சந்தித்து, உங்கள் இரத்த சர்க்கரை அளவைப் பரிசோதித்து, அதற்கேற்ப கிரீம் பயன்படுத்தவும். இறுதியாக, ஒருவரின் வாழ்க்கை முறையை மாற்றுவதே புத்திசாலித்தனமான தீர்வாகும்.
PCOS இல் முடி உதிர்தல்
பெண்களில் கணிசமான பகுதியினர் வைட்டமின் D மற்றும் B12 குறைபாடுகளுடன் உள்ளனர், எனவே நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை பரிசோதனைகள் செய்து தீர்மானித்துகொள்ளலாம். உங்களுக்குக் குறைபாடு இருந்தால், மருத்துவரை அணுகி, தேவையான சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளத் தவறாதீர்கள். இது உங்கள் முடியின் நிலையை மேம்படுத்தலாம். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், வாழ்க்கை முறை மாற்றங்கள் கூடப் பயனளிக்காமல் போகலாம்.
அத்தகைய சூழலில், உங்கள் தோல் மருத்துவர் இரவில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில மாற்று மருந்துகளை வழங்க வாய்ப்புள்ளது. கூடுதலாக, பிளேட்டலட் நிறைந்த பிளாஸ்மா ஊசி போன்ற செயல்முறைகள் மூலம் உங்கள் தலைமுடியை மேம்படுத்தலாம். இந்த ஊசிகள் அவ்வப்போது உங்கள் உச்சந்தலையில் செலுத்தப்படும்.
முடிவுரை
PCOS உள்ள பெண்களுக்கும், தோல் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி, சரியான நேரத்தில் தூங்குதல் மற்றும் உங்கள் சர்க்கேடியன் இசைவை பராமரித்தல் போன்ற மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம், ஏனென்றால் நீங்கள் அதைச் செய்யாவிட்டால், எந்தத் தோல் பராமரிப்பு வழக்கத்தாலும் உங்கள் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியாது.
images source: freepik