தாய், சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கக்கூடிய ஆரஞ்சு பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு கர்ப்பம் முதலே நீங்கள் உணவளிக்க தொடங்குகிறீர்கள். ஒரு கர்ப்பிணிப் பெண் எதைச் சாப்பிட்டாலும் அது குழந்தையின் ஆரோக்கியத்தில் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகையால், கர்ப்பிணிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் கருதி, சத்தான உணவுகளை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடலாமா?
இந்த சந்தேகம் பலருக்கு இருக்கலாம். கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானதே! ஆரஞ்சில் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய, வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கர்ப்பிணிகள் மற்றும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகின்றன. கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது, கர்ப்பிணிகளின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, தொற்று மற்றும் நோய்கள் வராமல் தடுக்கிறது. இதனுடன், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும். இன்று, இந்தப் பதிவில், கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அவற்றைச் சாப்பிடுவதற்கு ஏற்ற சரியான நேரம் பற்றி தெரிந்துகொள்வோம்.
கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Benefits of Eating Orange In Pregnancy
கர்ப்ப காலத்தில், ஆரஞ்சு சாப்பிடுவது தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தரும். அவை பின்வருமாறு :-
நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தும்
ஆரஞ்சில் வைட்டமின் C அதிகளவில் உள்ளது. இது உடலில் உள்ள இரும்பு மற்றும் ஜிங்க் அளவுகளைப் பராமரிக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் வைட்டமின் C நிறைந்த ஆரஞ்சு சாப்பிடுவது, தாய், சேய் இருவரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகிறது. மேலும், தொற்று மற்றும் பிற நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. இது குழந்தையின் எலும்புகள், இரத்த நாளங்கள், திசுக்கள் மற்றும் மூளை ஆரோக்கியமாக உருவாக உதவுகிறது.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்
கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. ஆரஞ்சில் நிறைந்துள்ள வைட்டமின் B6 மற்றும் ஃபோலிக் ஆசிட், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, நரம்புக் குழல் குறைபாடுகளையும் தடுக்கிறது. மேலும் ஆரஞ்சில் உள்ள ஃபோலேட், குழந்தையின் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதற்கும், நஞ்சுக்கொடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
நீரிழப்பை தடுக்கும்
கர்ப்ப காலத்தில் உடலில் நீர் சத்து குறைவது ஆபத்தானது. அதனால்தான், கர்ப்ப காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்படி கர்ப்பிணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரஞ்சில் நிறைந்துள்ள நீர் சத்தால், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாது. ஆகையால் கர்ப்ப காலத்தில் நீரிழப்பை தடுக்க ஆரஞ்சு சாப்பிடலாம்.
மலச்சிக்கல் நீங்கும்
கர்ப்ப காலத்தில், பெரும்பாலான பெண்கள் மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். இத்தகைய சூழலில், மலச்சிக்கலை சமாளிக்க ஆரஞ்சு சாப்பிடலாம். ஆரஞ்சுகளில் நார்ச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இதை சாப்பிடுவதால் மலம் எளிதாக வெளியேறும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
கர்ப்ப காலத்தில், பல கர்ப்பிணிப் பெண்கள் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். பொட்டாசியம் நிறைந்துள்ள ஆரஞ்சு, கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் பெற, கர்பிணிகள் ஆரஞ்சு சாப்பிடலாம்.
கர்ப்ப காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதற்கான சரியான நேரம்
ஒரு கர்ப்பிணிப் பெண், ஒரு நாளைக்கு 80 முதல் 85 mg வைட்டமின் C உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆரஞ்சு சாப்பிடலாம். காலை, மதியம் அல்லது வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம். இருப்பினும் கர்ப்பத்தில் வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், மருத்துவரின் ஆலோசனை அவசியம். சர்க்கரை சேர்த்து ஜூஸ் குடிப்பதை தவிர்த்திடுங்கள். ஆரஞ்சு பழங்களை அப்படியே சாப்பிட்டு, முழு நன்மைகளையும் பெறுங்கள்.
All Images Credit: freepik