காய்ச்சல் உள்ளவர்கள் சத்தான உணவைச் சாப்பிட வேண்டும். உணவுடன் சிலவற்றை சேர்த்துக் கொண்டால், காய்ச்சலை விரைவில் குணப்படுத்தலாம்.
காய்ச்சலிலிருந்து விரைவாக மீலுவதற்கான உணவுகள்:
காய்ச்சலுடன் ஏற்படும் இருமல், சளி, தலைவலி, குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளால் உடல் மிகவும் பலவீனமாகக்கூடும்.காய்ச்சலினால் ஏற்படும் வாய் கசப்பு, உணவின் மீதான விருப்பத்தைக் குறைத்து விடும்.இருப்பினும் சத்தான உணவைச் சாப்பிட வேண்டும்.உணவிலிருந்து உடலுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் காய்ச்சலிலிருந்து விரைவாகக் குணமடைய உதவுகிறது.சிலவற்றை உங்கள் உணவுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம் காய்ச்சலை விரைவில் குணப்படுத்தலாம். காய்ச்சலிலிருந்து விரைவாகக் குணமடைய உதவும் சில குறிப்புகளை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சூப்
காய்ச்சலிலிருந்து விரைவாகக் குணமடைய சூப் சாப்பிடலாம்.சூப் உட்கொள்வது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர்மம் பற்றாக்குறையை ஈடுசெய்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, இது காய்ச்சலை குறைக்கிறது. கூடுதலாக, சூப்பில் வைட்டமின்கள், கனிமங்கள், நார்ச்சத்து மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளன.இவை அனைத்தும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கப் பயனுள்ளதாக இருக்கும்.
இளநீர்
இளநீர் குடிப்பது காய்ச்சலிலிருந்து விரைவில் குணமடைய உதவுகிறது. காய்ச்சலில் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இளநீரில் குளுக்கோஸ் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன, இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. வாய் கசப்பாக இருக்கும் காய்ச்சல் வேளையில் இளநீரின் இனிப்புச் சுவை நாவிற்கு இதமாக இருக்கும்.
உலர் பழங்கள்
காய்ச்சலிலிருந்து விரைவாகக் குணமடைய உலர் பழங்களையும் உட்கொள்ளலாம். உலர் பழங்களில் நிறைந்துள்ள துத்தநாகம் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கவும் காய்ச்சலைக் குறைக்கவும் உதவுகிறது. இது தவிர, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், கொழுப்புகள் மற்றும் நச்சுமுறிவு பண்புகளும் உலர் பழங்களில் உள்ளன.காய்ச்சலில் ஒரு கிளாஸ் பாலுடன் பாதாம், முந்திரி போன்ற உலர் பழங்களைச் சாப்பிடலாம்.
பூண்டு
பெரும்பாலும் உணவின் சுவையை அதிகரிக்க பூண்டை பயன்படுத்தினாலும், பூண்டை உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் நன்மை பயக்கும். வைட்டமின்கள் B, வைட்டமின் C, செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. கூடுதலாக, பூண்டு நச்சுமுறிவு மற்றும் நச்செதிர்நிரல் பண்புகளைக் கொண்டுள்ளது, இது காய்ச்சல், சளி-இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் வீக்கத்திற்கு நன்மை பயக்கும்.
முட்டை
முட்டை சாப்பிடுவதால் பலவீனம் நீங்கித் தசைகள் வலுவடையும். இருப்பினும், காய்ச்சலில் ஆம்லெட் சாப்பிடுவதற்கு பதிலாக, வேகவைத்த முட்டையைச் சாப்பிடுங்கள். நீங்கள் ஆம்லெட் சாப்பிட விரும்பினால், கண்டிப்பாக அதில் நிறைய காய்கறிகளைச் சேர்க்கவும்.
காய்ச்சலால் உடல் அதிக பலவீனம் ஆகலாம். இதைத் தவிர்க்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்ச்சலிலிருந்து விரைவாகக் குணமடைய, சூப், உலர் பழங்கள், முட்டை, இளநீர் மற்றும் பூண்டு போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
All Images Credit: freepik