நெற்றியின் கருமையை நீக்கும் 5 வீட்டுவைத்தியங்களை இப்பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
அழகான மற்றும் குறைபாடற்ற சருமத்தைப் பெற பெண்கள் என்ன செய்வார்கள்? பளபளப்பான சருமத்தை பெறுவதற்காக அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்து கொள்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் பலமுறை செய்தும் நெற்றியில் உள்ள சருமம் தெளிவாக இருப்பதில்லை. நெற்றியில் கருமை ஏற்படுவது, பலர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைப்பாடு, ஹார்மோன் மாற்றங்கள், பலமான சூரிய ஒளியின் தாக்கம் அல்லது சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிகரித்தல் போன்ற காரணங்களினால் நெற்றியின் சரும நிறம் கருமையாக மாறும்.இந்த பிரச்சனையால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
நெற்றியில் உள்ள கருமையை நீக்கும் வீட்டு வைத்தியங்கள் (Home remedies to get rid of forehead darkness).
வெள்ளரிக்காய்
நெற்றியில் உள்ள கருமையை போக்க வெள்ளரி சாறை பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு அதிக நன்மை பயக்க கூடியது. இதனை முகத்தில் தடவினால் வெயிலினால் ஏற்பட்ட நிற மாற்றம்(sun-tan) மற்றும் கருவளையம் நீங்கும். நெற்றியில் உள்ள கருமை நீங்க, வெள்ளரிக்காய் சாறை நெற்றியில் தடவி உங்கள் கைகளால் மென்மையாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்வதால் உங்கள் நெற்றியில் உள்ள சருமம் சுத்தமாகி கருமை நீங்கும்.
பச்சை பால்
காய்ச்சாத பச்சை பால் முகத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே. பச்சைப் பாலை முகத்தில் தடவுவதால் சருமம் தெளிவாகி, முகம் பொலிவு பெறும்.நெற்றியில் உள்ள கருமையை நீக்க, ரோஸ் வாட்டரில் பாலை கலந்து இரவு தூங்குவதற்கு முன் நெற்றியில் தடவவும். இதை இரவில் முழுவதும் அப்படியே விடவும்.பின், காலையில் தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களில் வித்தியாசத்தைப் பார்க்க முடியும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நெற்றியில் உள்ள கருமையை நீக்கப் பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு பாத்திரத்தில் பாதாம் எண்ணெய், தேன் மற்றும் பால் பவுடரை ஒன்றாகக் கலக்கவும். இப்போது இந்தக் கலவையை உங்கள் நெற்றியில் தடவி உலர விடவும். பின்னர் தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் சில நாட்களில் நெற்றியில் உள்ள கருமை குறையும்.
மஞ்சள்
மஞ்சள் தோலுக்கு மிகவும் நன்மை பயக்கும். நெற்றியில் உள்ள கருமையை நீக்க மஞ்சளைப் பயன்படுத்தலாம். நெற்றியில் உள்ள கருமையை நீக்க வேண்டுமானால், பச்சை பாலில் மஞ்சள் கலந்து நெற்றியில் தடவவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, கைகளால் அதை மென்மையாகத் துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் உங்கள் நெற்றியில் உள்ள சருமம் சுத்தமாகும்.
பெருஞ்சீரகம்(சோம்பு)
பெருஞ்சீரகம் நம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நல்லது. இதைச் சாப்பிடுவதால் உடலில் சேரும் அழுக்குகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும். தினமும் இரவு உணவுக்குப் பின், ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், சில நாட்களில் நெற்றியில் உள்ள கருமை நீங்கிவிடும். சமையலுக்கு பயன்படுத்தும் இனிப்பு சேர்க்காத பெருஞ்சீரகத்தை சாப்பிடுங்கள்.
இந்த வீட்டு வைத்தியங்களின் உதவியுடன், நீங்கள் நெற்றியின் கருமையைப் போக்கலாம். இதனுடன், வெயிலில் செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து, உங்கள் உட்கொள்ளளையும் கவனித்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் பின்பற்றினால், உங்கள் நெற்றியில் உள்ள கருமை சில நாட்களில் நீங்கிவிடும்.
image source: freepik