நீங்கள் பயன்படுத்தும் பர்ஃபியூம் வாசனை நீண்ட நேரம் உங்கள் உடலில் இருக்க வேண்டும் என்றால், அதனை இந்த முக்கிய இடங்களில் அடித்துக்கொள்ளுங்கள்.
நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பர்ஃபியூம் வாசனை, நம் மீது நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்றே விரும்புவோம். அதற்கு முக்கியமான ஒன்று, நாம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து அமையும். அதனால், நாம் அனைவரும், பர்ஃபியூமை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். பர்ஃபியூமை நாம் உடலில் சில முக்கிய இடங்களில் அடித்துக்கொள்ள வேண்டும். இது நீண்ட நேரம் உங்கள் மீது வாசனையை தக்க வைக்கும். அந்த முக்கிய இடங்கள் என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
சிறந்த இடங்கள்
பொதுவாக கைகள், அக்குள், கழுத்து மற்றும் ஆடையில் பர்ஃபியூமை அடிப்பது வழக்கம். ஆனால் இந்த பகுதிகளில் அடிப்பதன் மூலமாக வாசனை வெகு நேரத்துக்கு நீடிப்பதில்லை.
அதனால், கெலின் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜித் டால்மியா, பர்ஃபியூம் வாசம் நீண்ட நேரம் வீச, 5 இடங்களை பரிந்துரை செய்கிறார்.
முடி
பர்ஃபியூம் வாசனை நீண்ட நேரம் இருக்க வேண்டுமெனில், உங்கள் முடியில் சிறிது பர்ஃபியூமை அடித்துக்கொள்ளலாம். முடியை 10 இன்ச் தூரத்தில் பிடித்து, பர்ஃபியூமை லேசாக அடிக்கவும். தலைமுடியில் பர்ஃபியூமை அடிப்பதால், முடியை கோரும் போதெல்லாம் அதன் வாசனை வெளிவரும்.
காதுகளுக்கு பின்
காதுகளுக்கு பின்புறத்தில் பர்ஃபியூம் அடிப்பதன் மூலம், ஒரு வலுவான வாசனையை கொடுக்கும். இது நாள் முழுவதும் உங்கள் மீது வாசனையை நிலைத்திருக்க செய்யும். காதுக்கு பின்னால், பர்ஃபியூம் அடிக்கும் போது, அது ஆவியாவதை தடுத்து வாசனையை நிலைக்க செய்கிறது. வலுவான வாசனை சிலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். அதனை தந்திரமாக கையாண்டு, சரி செய்ய முடியும். அதற்கு இந்த டைப் பயன்படும்.
நாடித்துடிப்பு பகுதி
நாடித்துடிப்பு பகுதியில் பர்ஃபியூம் அடிக்கும் போது, அது வாசனையை சிறந்த முறையில் வெளியிடுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது வாசனையை அதிகரிக்க செய்வதோடு, நீண்ட நேரம் வாசனை நிலைத்து நிற்கவும் செய்யும் என்கின்றனர். எனவே, நறுமணம் நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்று விரும்பினால், உங்கள் கை மணி கட்டு பகுதியில் சிறிது பர்ஃபியூமை அடிக்க மறக்காதீர்கள்.
முழங்கை உள்ளே
முழங்கை உள்பகுதி வெப்பத்தை வெளியிடுகிறது. இது மணிக்கட்டின் அதே குணத்தை கொண்டுள்ளது. இங்கு பர்ஃபியூம் அடிக்கும் போது நல்ல வாசனை வெளியாகிறது. முழங்கையில் இருந்து வெளியேறும் வெப்பம், வாசனை அதிகரிக்க உதவுகிறது. ஏதேனும் பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறீர்கள் எனில், இந்த முறையை நீங்கள் பின்பற்றலாம்.
முழங்கால்களுக்கு பின்னால்
உங்கள் முழங்கால்களுக்குப் பின்னால் உள்ள மென்மையான பகுதி, பெர்பியூமை பயன்படுத்துவதற்கான மற்றொரு சிறந்த இடமாகும். இங்கு பர்ஃபியூம் அடிக்கும் போது, அது உங்களுக்கு நல்ல வாசனையை தரும். குறிப்பாக உங்கள் ஆடைகளில், இந்த வாசனை நீடித்து நிற்கும்.
images credit: freepik