கை மற்றும் கால்களில் உள்ள நகத்தை அழகாக வைத்திருப்பதும், அதே சமயம் சரியான முறையில் கவனித்துக் கொள்வதும் அவசியம் ஆகும். கைகள், கால்களின் நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நகம் பராமரிப்பை இயற்கையாக வீட்டிலேயே சில பொருள்களைக் கையாண்டு மேற்கொள்ளலாம். இந்த வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம், கை மற்றும் கால்களின் நகங்களை எளிதாகச் சுத்தம் செய்வதுடன் அவற்றின் அழகையும் மேம்படுத்தலாம். அவற்றைப் பற்றிக் காணலாம்.
நகத்தை அழகாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்கும் முறைகள்
நகங்களை அழகுக்காக மட்டும் பராமரிப்பது அல்ல. ஆரோக்கியத்திற்கும் உடன்பட்டது ஆகும். இதன் சில வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
- நகங்களை அதிக அளவு வறட்சியடையக் கூடாது. எப்போதும் நகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். ஈரப்பதத்துடன் இருப்பது நகங்களை வலுவாக வைத்திருக்க உதவும். எனவே, அதிக அளவிலான நீர் அருந்த வேண்டும்.
- நகங்கள் வலுவடைய உணவில் நார்ச்சத்து, புரதம், கால்சியம் போன்ற சத்துக்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- நகங்களை எப்போதும் சின்னதாக வைத்திருக்க வேண்டும். நீண்ட நகங்கள் வளர்த்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், குட்டையான நகம் உள்ள போது அதன் பராமரிப்பும் குறைந்த அளவே தேவைப்படும்.
- அதே சமயம், குட்டையான நகங்களுக்கு அடியில் அழுக்கு சேர்வதற்கான வாய்ப்பும் குறைவாக இருக்கும்.
- மேலும், நீருக்குள் அதிக நேரம் கையை வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருப்பின், கையுறை அணிந்து கொள்வது நல்லது.
- நெயில்பாலிஷ் போடுவதாக இருப்பின், நீண்ட நாள்களுக்கு அப்படியே விடக்கூடாது. ரிமூவர் பயன்படுத்தி, நகங்களில் நெயில் பாலிஷை நீக்கிவிட வேண்டும். அதிலும் குறிப்பாக, அடர்நிறத்திலான நெயில்பாலிஷ்களை விரைவில் நீக்கிவிட வேண்டும். மேலும், நெயில் பாலிஷ் ரிமூவரை அதிகமாக பயன்படுத்துதலையும் தவிர்க்க வேண்டும்.
- நகங்களைச் சுற்றியுள்ள தோலை பராமரிப்பது நல்லது. முகத்திற்கு மசாஜ் செய்யக்கூடிய கைவிரல்களின் நகங்கள் வளரக்கூடிய தோல் பகுதிக்கு மசாஜ் செய்ய வேண்டும். இது அந்தப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்ததுடன் நகங்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும்.
- நகம் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். நகம் கடிப்பது நகங்களின் வளர்ச்சியைத் தடுப்பதுடன், அதன் நுனியில் முறிவு உண்டாக்கும்.
- நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு, எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இது நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி விடும்.
இந்த பதிவும் உதவலாம்: நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?
இது போன்ற முறைகளில் நகங்களை பராமரிப்பதன் மூலம், நகங்கள் அழகாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.