புதிதாகக் குழந்தை பெற்ற தாய்மார்களே! இப்பதிவில் பகிரப்பட்டுள்ள பல முக்கியமான தகவல்களைப் படித்தறிந்து பலன் பெறுங்கள்.
புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பது கடினமானது. இருப்பினும் அதை சிறப்பாகச் செய்ய முயற்சிக்கும் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக, முதல் முறையாகக் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்குக் குழந்தை வளர்ப்பு குறித்து நிறைய சந்தேகங்கள் இருக்கலாம். குழந்தை அழத் தொடங்கினாலே பதறிவிடுவார்கள். மேலும் குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். பிறந்த குழந்தையால் தனது நிலைகுறித்து வாய்விட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், சில அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம் குழந்தை எதிர்கொள்ளும் பிரச்சனையைக் கண்டுபிடிக்கலாம். இந்த அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் ஐந்து சூழ்நிலைகள்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. குழந்தையின் வெப்பநிலை அதிகமாக இருந்தால்
தாயின் அரவணைப்பில் இருக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடல் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அதிக காய்ச்சல் இருப்பது இயல்பானது அல்ல. ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, காய்ச்சல் இருந்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள கூடாது. இந்த வயதில் 102.2 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல் ஆபத்தானது. காய்ச்சலைத் தவிர, குழந்தை சுவாசிக்கும்போது சத்தம் கேட்டாலோ அல்லது மூக்கு துவாரம் வீங்கினாலோ, குழந்தை சுவாசிப்பதில் சிரமங்கள் இருக்கலாம். இந்த நிலையில், குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
2. குழந்தையின் கண்கள் மேலே சொருகுதல்
இயல்பாக இருக்கும் குழந்தையின் கண்கள் திடீரென மேல் நோக்கி நகரும் நிலை, வலிப்புநோயின் அறிகுறியாகும். இந்த நேரத்தில் குழந்தை சுயநினைவின்றி இருக்கலாம், உடலும் உள்ளுணர்ச்சியை வெளிக்காட்டாது. ஆனால் குழந்தையின் கால்கள் விறைப்பாக இருக்கலாம். மேலும் காய்ச்சல் காரணமாக ஏற்படும் வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். இந்த சூழலிலும் தாமதிக்காமல், குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
3. சிவந்த கண்கள்
குழந்தையின் கண் சிவப்பாக இருப்பது, கண்களில் நீர் வடிதல் அல்லது ஒட்டுதல் போன்றவை இமைப்படல அழற்சியின் அறிகுறிகளாக இருக்கலாம்.இந்தப் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், குழந்தை பால் குடிப்பதில் விருப்பமின்றி இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
4. பிறந்த குழந்தையின் அழுகை
உங்கள் குழந்தை அதிகமாக அழுதால், அழுவதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பசி, தூக்கம், ஈரமான டயப்பர் மாதிரியான காரணங்களுக்காக அழுகிறாரா என்பதை சரிபார்க்கவும். இந்தக் காரணங்களின்றி, குழந்தை சத்தமாக அழும் பட்சத்தில், அவருக்கு வேறு ஏதேனும் உள் பிரச்சனை இருக்கலாம். குழந்தையின் அழுகையில் வித்தியாசத்தை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மட்டுமே அசாதாரணமான முறையில் அழுகிறார்கள். இந்த நிலையில் குழந்தையை சமாதானம் செய்வது கடினமாக இருக்கும். குழந்தை அசதாரணமான குரலில் அழுவதை நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். குழந்தையின் அழுகை, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் அல்லது வாந்தியின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதே சமயம் குறைந்த குரலில் அழுவதும், மந்தமாக இருப்பதும் நல்ல அறிகுறி அல்ல, இந்த சூழலிலும் மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகிறது.
5. பிறந்த குழந்தைகளில் மூக்குத்துவார(Nostril) பிரச்சனைகள்
குழந்தை சுவாசிக்கும்போது சத்தம் கேட்டால், அவர் வேகமாக சுவாசிக்கிறார் என்று அர்த்தம். இந்நிலையில் குழந்தையின் வயிறு உள்நோக்கி இறங்குவதை நீங்கள் பார்க்கலாம். இந்த அறிகுறிகள் மூலம் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். குழந்தைக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும்.அதே சமயம், இரத்த நச்சுப்பாடு(sepsis) அல்லது தொற்றுக்குப் பிறகும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கலாம்.
இதை தவிர்த்து, குழந்தை கீழே விழுந்து, அதனால் உடலில் ஏதேனும் காயங்கள் இருந்தாலும், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். மேற்கூறிய சூழல்களில் மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க முயற்சிக்காதீர்கள்.
Images Credit: freepik