Brain Aneurysm: பொதுவாக மூளையில் அல்லது அதற்கு அருகில் உள்ள இரத்த தமனியின் உணர்திறன் பகுதியில் வீக்கம் ஏற்படுதலே மூளை அனீரிசம் எனப்படுகிறது. இந்த மூளை அனீரிசம் அல்லது பெருமூளை அனீரிசம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வகை நோயானது குழந்தைகள் உட்பட எந்த வயதினரையும் தாக்கக் கூடிய நோயாகும். ஆனால், பெரும்பாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 40 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்களே. இந்த மூளை அனீரிசம் நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆஸ்டர் ஆர்வி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தனஞ்சய ஐ பட் விளக்கமளித்துள்ளார். அதனைப் பற்றி இங்குக் காண்போம்.
மூளை அனீரிசத்தை எப்படி கண்டறிவது
ஒரு நபருக்கு மூளை அனீரிசம் இருப்பதை ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரால் இமேஜிங் சோதனை செய்து கண்டறிய உத்தரவிடப்படுகிறது. கம்ப்யூட்டட் டோமோகிராபி, காந்த அதிர்வு இமேஜிங், காந்த அதிர்வு ஆஞ்சியோகிராபி, உள்ளிட்ட சில சோதனைகளின் மூலம் மூளையில் உள்ள அனீரிசத்தின் வடிவம், அளவு மற்றும் அதன் இடத்தைக் கண்டறியலாம். இருப்பினும், இந்த ஆரம்ப சோதனையில் மூளை அனீரிசம் கண்டறிய முடியாமல் போகலாம். இந்த நேரங்களில் மருத்துவர் லம்பர் பஞ்சரை பரிந்துரைக்கலாம். இது செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் இரத்தம் உள்ளதா இல்லையா என்பதை ஆய்வில் வெளிப்படுத்தும்.
மூளை அனீரிசத்திற்கான அறிகுறிகள்
மூளை அனீரிசம் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம். இதன் முக்கிய அம்சமாக, கடுமையான தலைவலி ஏற்படும். மேலும், இது தொடர்பாக வாந்தி, வலிப்பு ஏற்படுதல், மூட்டு பலவீனமடைவது அல்லது நரம்பியல் சிக்கல்கள் ஏற்படலாம். சில சமயங்களில் அனீரிசம்கள் மூளை சுருக்கத்தை ஏற்படுத்தி, நரம்பியல் சார்ந்த சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!
மூளை அனீரிசம் ஏற்படுவதற்கான காரணங்கள்
மூளை அனீரிசம் உண்டாவதற்கு சில குறிப்பிட்ட காரணிகள் உள்ளன. அதிர்ச்சி காரணமாக மூளையில் ஏற்படும் பாதிப்புகள், உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் தொற்று இருப்பது, புகைபிடித்தல், பெருந்தமனி தடிப்பு அதாவது இரத்த நாளங்களின் சுவர்களில் கொழுப்பு குவிந்து இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
மூளை அனீரிசத்தால் யார் பாதிக்கப்படுவார்கள்
- இந்த மூளை அனீரிசத்தால் வயதான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, 40 முதல் 60 வயது வரை உள்ள நபர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- மார்ஃபேர் சின்ட்ரோம் என்ற இணைப்பு திசு தொடர்பான மரபணு நிலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை அனீரிசத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
- சிறுநீரக பாலிசிஸ்டிக் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூளை அனீரிசம் நோயால் பாதிக்கப்படுவர்.
- ஃபைப்ரோமஸ்குலர் டிஸ்ப்ளாசியா அல்லது தமனி சிதைவு, பெருமூளை தமனி அழற்சி போன்ற அசாதாரண இரத்த நாளங்களின் நிலையைக் கொண்டவர்கள் மூளை அனீரிசத்தால் பாதிக்கப்படுவர்.
மூளை அனீரிசத்திலிருந்து எப்படி தப்பிப்பது
ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் சிதைவடையாத மூளை அனீரிசிம்கள் கண்டறியப்படாமல் இருக்கும். அனீரிசத்தின் அளவு, இடம் மற்றும் பிற கூறுகளின் அடிப்படையிலேயே இந்த சிதைவின் ஆபத்து இருக்கும். இந்த அனீரிசம் வெடித்து, மூளையைச் சுற்றியுள்ள பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படுமாயின் அது பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.
எனவே சிதைந்த மூளை அனீரிசத்திற்கு அவசர மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது. இந்த சிதைந்த அனீரிசத்திற்கு சிகிச்சை ஏதும் அளிக்கப்படாத போது இறப்பு ஏற்படலாம் அல்லது உடல் இயலாத நிலையை அடைந்து விடுவதற்கான ஆபத்து ஏற்படுகிறது. இந்த சிதைந்த மூளை அனீரிசம் ஏற்பட்டவர்களுள் சுமார் 75 சதவீதம் அளவிலான நோயாளிகள் 24 மணி நேரத்திற்கும் மேலாக உயிர் வாழ்கின்றனர். இருப்பினும், இந்த உயிர் பிழைத்தவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆறு மாதங்களுக்குள்ளேயே அபாயகரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.