How To Maintain Friendship After Marriage: திருமணத்திற்குப் பின் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மாறி விடும் என்று எல்லோருமே சொல்வர். ஏனெனில், திருமணம் முடிந்த பிறகு, ஆண், பெண் என இருவரும் தங்களது குடும்ப பொறுப்புகளை தாங்கி சுமப்பதில் கவனம் செலுத்துவர். இதனால் திருமணத்துக்குப் பின், நண்பர்களைச் சந்திக்கவோ, பேசவோ போதுமான நேரம் இல்லாமல் இருப்பர். திருமணத்துக்குப் பின் பெரும்பாலும் சந்திக்கக் கூடிய பக்க விளைவுகளில் ஒன்றாக நண்பர்களிடமிருந்து விலகி இருப்பதும், விரிசல் உண்டாவதும் ஆகும். இதனால், திருமணத்திற்குப் பிறகு நண்பர்களிடம் இருந்து விலகி தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி இன்று அனைவரின் மனதில் எழும் ஒன்றாகும். ஆனால், அவ்வாறு இல்லை. கணவர் அல்லது மனைவி மற்றும் நண்பருடனான உங்கள் பிணைப்பையும், சமநிலையையும் பேணுவதற்கு சில குறிப்புகளைப் பின்பற்றலாம்.
திருமணத்திற்குப் பின் நட்பைப் பேணிக்காக்க சில குறிப்புகள்
திருமணத்திற்குப் பின், கணவன் அல்லது மனைவி இருவரும் வீட்டை நிர்வகிப்பது, குடும்ப பொறுப்புகள் உள்ளிட்டவற்றால் நண்பர்களுடன் பேச நேரமில்லாத சூழ்நிலை ஏற்படும். திருமணத்திற்குப் பின்னும் நண்பர்களை எவ்வாறு பேணிக்காப்பது என்பது குறித்துக் காணலாம்.
நேரத்தை நிர்வகித்தல்
திருமணத்திற்குப் பிறகு நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பதை விரும்பாதவர்கள், அவர்களுக்காக நேரத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் வீட்டில் சிறிய சிறிய வேலைகளைச் செய்யும் போது அல்லது வீட்டை விட்டு வெளியே வரும் போது போன்ற நேரங்களில் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசலாம் அல்லது சந்திக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 8 விஷயங்களை உங்கள் மனைவியிடம் சொல்லாதீர்கள்
நண்பர்கள் குழு
நிறைய நண்பர்களைக் கொண்டிருப்பவர்களுக்கு, ஒவ்வொரு நண்பனுடனும் தனித்தனியே பேச நேரம் இல்லாமல் போகலாம். ஆனால் இதற்கு உதவும் விதமாகவே நிறைய மெசேஜிங் ஆப்கள் உள்ளன. உதாரணமாக வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அனைத்து நண்பர்களுடனும் பேசலாம்.
நண்பர்களுடன் சேர்ந்து உண்ணுதல்
நண்பர்களைச் சந்திக்க நேரம் முற்றிலும் கிடைக்கவில்லை எனில், மதிய அல்லது இரவு உணவிற்கு நண்பர்களை அழைப்பதே சிறந்த வழி. நண்பர்கள் திருமணமானவர்கள் என்றால் குடும்பத்துடன் அழைத்து உணவு விருந்துகளில் கலந்து கொள்ளலாம். இது உங்கள் நண்பர்களுடனான உறவை பலப்படுத்தும்.
முயற்சிகளை மேற்கொள்ளுதல்
திருமணம் முடிந்த பிறகு சிலர் வீட்டை விட்டு வெளியே வர நேரமில்லாத அளவு பிஸியாக இருப்பர். ஆனால், இது போன்ற நிலையில் இருக்கும் நபர்கள், நண்பர்களைச் சந்திக்க அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ள சிறிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மற்ற சில குறிப்புகள்
- வேலை செய்பவர்களாக இருந்தால், அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிறகு வழியில் நண்பர்களை சந்திக்க முயற்சிக்கலாம்.
- கணவன் அல்லது மனைவி உடன், உங்கள் நண்பர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்யலாம். இது திருமணம் மற்றும் நட்பு பந்தத்தை பேணிக்காப்பதற்கு சிறப்பான வழியாக அமையும்.
- வெளியில் செல்லும் போது நண்பர்களைச் சந்திக்கலாம்.
- வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நண்பர்களை அழைக்கலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம், கணவன் அல்லது மனைவி தங்களது நண்பர்களுடனான நட்பை சிறப்பாக பேணிக்காக்க முடியும்.