கோபமாக இருக்கும் உங்கள் துணையை சமாதானப்படுத்துவது எப்படி: சண்டைகள் இல்லாமல் உறவுகள் இல்லை.ஆனால் பல சமயங்களில் நாம் தெரிந்தோ தெரியாமலோ நம் துணையின் மனதை புண்படுத்தி அவரின் கோபத்துக்கு ஆளாகிறோம். ஒரு சிலரின் கோபம் சில மணி நேரங்கள் தான். இதற்கு நேர் எதிராக, பல நாட்கள் கடந்த பிறகும் கூடத் தங்கள் துணையுடன் பேசாமல் கோபமாக இருக்கும் ஒரு சிலரையும் பார்த்திருப்போம்.இப்படி பல நாட்கள் பேசாமல், கோபம் நீடித்தால் உறவில் விரிசல்கள் ஏற்படலாம். சண்டைக்குப் பிறகு முதலில் யார் வந்து பேசிச் சமாதானம் செய்வது என்ற ஆணவம் உறவைப் பலவீனம் ஆக்கிவிடும்.உங்கள் உறவு வலுவாக, அழகாக இருக்க விரும்பினால், உங்கள்மீது தவறு இருக்கும் பட்சத்தில் உங்கள் துணையை சமாதானம் செய்ய முயற்சி செய்யுங்கள்.உங்கள் சண்டைக்கான காரணம் எதுவாக இருந்தாலும், உங்கள் உறவைக் காப்பாற்றிக் கொள்ள நீங்கள் என்ன முயற்சி செய்கிறீர்கள் என்பதே முக்கியம். கோபமாக இருக்கும் உங்கள் துணையை சமாதானப்படுத்துவதற்கான சில வழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த வழிகளைப் பின்பற்றினால் உங்கள் துணைக்கு கோபம் தணிந்து காதல் அதிகரிக்கும், மேலும் உங்கள் உறவும் பலப்படும்.
மன்னிப்பு கேளுங்கள்
நீங்கள் செய்த தவறால் உங்கள் துணை கோபமடைந்திருந்தால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்பது உங்கள் தவறை நீங்கள் உணர்ந்ததாக மற்றவருக்கு உணர வைக்கும். அதனால், நீங்கள் மன்னிப்பு கேட்டால் கட்டாயமாக உங்கள் துணையின் கோபம் தணிந்து, அவர் உங்களை மன்னித்து விடுவார். முக்கியமாக, உங்கள் துணையுடன் பேசுவதற்காக மட்டும் மன்னிப்பு கேட்காமல் நீங்கள் செய்யும் தவறை உணர்ந்து மனதார மன்னிப்பு கேளுங்கள்.மேலும் எதிர்காலத்தில் உங்கள் தவறை சரிசெய்யவும் முயற்சி செய்யுங்கள்.
பரிசளித்து கொண்டாடுங்கள்
உங்களிடம் கோபமாக இருக்கும் உங்கள் துணைக்கு பரிசளித்து சமாதானம் செய்யலாம்.அவருக்கு விருப்பமான அல்லது தேவையான எந்தப் பொருளையும் பரிசளிக்கலாம். இதனுடன் உங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு ரோஜா பூவையும் கொடுக்கலாம். நீங்கள் உங்கள் துணைக்கு கொடுக்கும் பரிசு விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உண்மையில் உங்கள் உண்மையான உணர்வுகளே விலை மதிக்க முடியாதது.
ஒரு அழகான அட்டை கொடுங்கள்
உங்கள் துணையிடம் நேரடியாக உங்கள் மனதில் உள்ள விஷயங்களை வெளிப்படுத்தச் சங்கடமாக இருந்தால், நீங்கள் அவருக்கு ஒரு அழகான வாழ்த்து அட்டை கொடுக்கலாம். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி, நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதையும் அட்டையில் எழுதிக் கொடுக்கலாம். இது தவிர, உங்கள் இருவருக்கும் விருப்பமான ஒரு வெளி இடத்திற்கு சென்று உங்களின் தரமான நேரத்தை ஒன்றாகச் செலவிடலாம். பூங்கா, கோவில், உணவகம் அல்லது உங்கள் வீட்டு மொட்டை மாடியாகக் கூட இருக்கலாம். இருவரும் அமர்ந்து அழகான விஷயங்களைப் பேசுங்கள். இது கட்டாயமாக உங்கள் துணையின் கோபத்தை தணிக்கும்.
அவர்களுக்குப் பிடித்த உணவைச் சமைக்கவும்
வயிற்றின் வழியே இதயத்திற்கு செல்லும் வழி என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் துணையை சமாதானம் செய்ய, நீங்கள் அவருக்குப் பிடித்த மிகவும் விருப்பமான உணவுகளைச் சமைக்கலாம். நீங்கள் அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள எடுக்கும் கடுமையான முயற்சிகளைக் கண்டு, கட்டாயமாக மனம் மகிழ்ந்து உங்களை மன்னித்து விடுவார். குறிப்பாக ஆண்களைவிடப் பெண்களுக்கு, தன்னுடைய துணை தனக்கு பிடித்த உணவுகளைச் சமைத்து கொடுப்பது நிறைந்த மகிழ்ச்சியை தரும்.
வெளிப்படையாகப் பேசுங்கள்.
கோபமாக இருக்கும் உங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். உங்களிடம் அவர் எதிர்பார்க்கும் விஷயங்களைப் பற்றியும், பிற்காலத்தில் இருவருக்கிடையே சண்டைகள் வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றியும் விவாதிக்கவும். வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் இருவரின் உணர்வையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியும். பேசாமல் இருப்பதை விட வெளிப்படையாகப் பேசினால் உங்கள் துணையின் கோபத்தை தணிக்க முடியும்
உங்களிடம் கோபமாக இருக்கும் உங்கள் துணையை இந்த வழிகளில் சமாதானப்படுத்தலாம். சிறு சண்டைகளுக்காகப் பலநாள் பேசாமல் இருக்காதீர்கள். அவர் செய்த சிறிய தவறை மறந்து அவர் உங்களுக்காகச் செய்த மிகப்பெரிய விஷயங்களை நினைவுபடுத்திப் பாருங்கள்.நீங்கள் யோசிக்கும் மறுகனமே உங்கள் கோபம் இருந்த இடம் காணாமல் ஓடிவிடும்.
Image Source: Freepik