Lung Cancer: புற்றுநோயைப் பொறுத்தவரை, ஆரம்பகால நோயறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை முக்கியமானது. இதை செய்வது ஒருவரின் ஆபத்து காரணிகளை பெருமளவு குறைக்க உதவும். அதோடு உயிர் பிழைக்கும் வாய்ப்பையும் இது அதிகரிக்கும்.
குறிப்பாக நுரையீரல் புற்றுநோயின் விஷயத்தில், தொடர்ந்து இருமல், மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகளாகும், இருப்பினும், அவை மற்ற சுவாச நிலைமைகளுடன் தவறாக கண்டறியப்படலாம். இதுகுறித்து நமது குழுவிடம் டாக்டர் குஞ்சல் படேல், மூலக்கூறு புற்றுநோயியல் நிபுணர், நியூபெர்க் சென்டர் ஃபார் ஜெனோமிக் சென்டர் கூறிய தகவலை பார்க்கலாம்.
நுரையீரல் புற்றுநோய் காரணம்
நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரல் திசுக்களில் உள்ள அசாதாரண உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் வகைப்படுத்தப்படும் ஒரு வீரியம் மிக்க நிலை . இது உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணமாகும், இது ஆண்கள் மற்றும் பெண்களிடையே அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவிக்கிறது.
புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாகும், 85% பேருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணம் புகைப்படித்தல் தான் என கூறப்படுகிறது.
மொத்த வகையான புற்றுநோய்களில் இந்தியாவை பொறுத்தவரை நுரையீரல் புற்றுநோய் சதவீதம் 5.9 ஆகவும், நுரையீரல் புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் 8.1 சதவீதமாகவும் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள்
- தொடர் இருமல்
- மூச்சு திணறல்
- நெஞ்சு வலி
- இருமல் இரத்தம்
- சோர்வு
- மீண்டும் மீண்டும் நுரையீரல் தொற்று
- விழுங்குவதில் சிரமம்
- கழுத்து அல்லது முகத்தில் வீக்கம்
- மூச்சுத்திணறல்
நுரையீரல் புற்றுநோய் குறித்து கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்
இதுகுறித்து டாக்டர் படேல் கூறுகையில், நுரையீரல் புற்றுநோய் என்பது குறைவாக அறியப்படும் அறிகுறிகள் மூலமாகவே வெளிப்படும். இதை முன்கூட்டிய கண்டறிய விழிப்புணர்வு மிக முக்கியம். விவரிக்க முடியாத எடை இழப்பு இதற்கு அறிகுறியாக இருக்கலாம்.
அதேபோல் தோள்பட்டை அல்லது முதுகு வலி போன்றவைகளும் ஏற்படலாம். நுரையீரல் கட்டிகள் நரம்புகளுக்கு எதிராக அழுத்தி இந்த பகுதிகளில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
கடைசியாக, அடிக்கடி தலைவலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது காலப்போக்கில் மோசமடையும். வழக்கமான சிகிச்சையில் இது சரியாகவில்லை என்றால் இது நுரையீரல் புற்றுநோயை குறிக்கலாம்.
சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதல்
நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது என்பது, மார்பக எக்ஸ்-கதிர்கள் அல்லது CT ஸ்கேன் போன்ற இமேஜிங் சோதனைகள் மூலம் கண்டறியலாம். அதேபோல் சந்தேகத்திற்கிடமான திசுக்களின் பயாப்ஸிகள் போன்ற பிற சோதனைகளின் மூலம் கண்டறியப்படலாம். உங்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், புற்றுநோயின் நிலை மற்றும் வகையைப் பொறுத்து சிகிச்சை விருப்பங்கள் மாறுபடும்.
பொதுவான சிகிச்சைகளில் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சை ஆகியவை அடங்கும். புற்றுநோயின் நிலை, நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் கட்டியின் குறிப்பிட்ட பண்புகள் பொறுத்து சிகிச்சை நிலை மாறுபடும். ஏதேனும் தீவிரத்தையோ, அசௌகரியத்தையோ தொடர்ந்து உணரும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik