டெங்கு காய்ச்சலின்போது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவில் சிறப்பு கவனம் தேவை.
டெங்கு காய்ச்சலின்போது குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவுகள்: குழந்தைகள் வெளியில் விளையாடுவதாலும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதாலும் டெங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.பருவகால நோய்கள் மற்றும் வைரஸ் தொற்றுகளாலும் எளிதில் பாதிக்கப்படலாம். ஆகையால் மாறிவரும் பருவ காலங்களில், குழந்தைகளுக்குக் கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக, இந்த நேரத்தில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்றுநோய்களின் தாக்கம் பெருமளவில் அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.இந்த சூழலில், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், அவர்கள் விரைவில் குணமடைய பெற்றோர்கள் அவர்களுக்கு என்ன உணவளிக்க வேண்டும்? இந்தக் கேள்விதான் பெரும்பாலும் கேட்கப்படுகிறது.
டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன உணவு அளிக்க வேண்டும்?
இந்தக் கேள்விக்கான கூடுதல் தகவலுக்காக, மருத்துவ ஊட்டச்சத்து நிபுணரும் உணவியல் நிபுணருமான கரிமா கோயலிடம் பேசினோம். டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் விரைவில் குணமடைய உதவும் 5 உணவுகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த 5 ஆரோக்கியமான உணவுகளைக் கொடுங்கள்
பருவகால பழங்கள்
பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், டெங்குவிலிருந்து விரைவாகக் குணமடைய உதவுகிறது. மாதுளை, கிவி போன்ற பருவகால பழங்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இதனுடன், கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் C நிறைந்த பழங்களையும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பழங்களை அப்படியே சாப்பிட கொடுக்கலாம். குழந்தைகள் சாப்பிட மறுக்கும் சமயங்களில் பழச்சாறுகள் கொடுங்கள். பழங்களில் மிகுதியாகக் காணப்படும் நுண்ணூட்டச் சத்துக்கள், டெங்குவிலிருந்து விரைவில் மீள்வதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
திரவ உணவுகள்
குழந்தைகளை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவை பராமரிக்கவும் அவர்களுக்குத் தேவையான அளவு திரவங்களைக் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இளநீரில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், குழந்தைகளுக்கு ஆற்றல் அளித்து விரைவில் குணமடைய உதவுகிறது.இளநீரை தவிர, வீட்டில் தயாரித்த பழச்சாறுகள் மற்றும் பிற ஆரோக்கியமான பானங்களையும் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 2 கிளாஸ் இளநீரை குழந்தைக்குக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். இதனுடன் குழந்தைகளுக்கு மோர், லஸ்ஸி போன்ற திரவ உணவுகளையும் கொடுக்கலாம்.
பப்பாளி இலைகளின் கஷாயம் அல்லது சாறு
பப்பாளி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, கஷாயம் செய்து குடிக்க கொடுக்கலாம்.இது இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாகக் கருத்தப்படுகிறது.டெங்குவுடன் தொடர்புடைய இரத்த தட்டுக்குறை மற்றும் அறிகுறிககளை குறைப்பதிலும் இது நன்மை பயக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகிறது.மேலும், டெங்குவை விரைவாகத் தோற்கடிக்க உதவுகிறது.
புரதம் நிறைந்த உணவுகள்
டெங்கு காய்ச்சலின்போது குழந்தைகளுக்குப் புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை காரணமாக அவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதிக புரதம் கொண்ட உணவுகளைத் தவிர்த்து எளிதில் ஜீரணிக்ககூடிய புரத உணவுகளைக் கொடுங்கள்.சத்தான காய்கறிகள், நீர்க்க இருக்கும் பருப்பு சாறு, காய்கறி சூப்கள் போன்றவற்றை கொடுக்க முயற்சி செய்யுங்கள். அசைவ சூப்பும் கொடுக்கலாம். இது அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.
சீந்தில்(Giloy) இலைகளின் கஷாயம் அல்லது சாறு
பப்பாளி இலைகளைப் போலவே, சீந்தில் இலைகளின் சாறு அல்லது கஷாயத்தைக் குடிப்பதும் தட்டுக்களை அதிகரிக்க உதவுகிறது.சீந்தில் இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.இது டெங்குவை விரைவில் குணப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.மேலும், பல கடுமையான நோய்களிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கிறது.
image source: freepik