பிறந்த குழந்தை வாந்தி எடுப்பதற்கான சரியான காரணத்தையும், அதற்கான தீர்வையும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
புதிதாகப் பிறந்த தன்னுடைய குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றி ஒரு தாய் கவலைப்படுவது இயல்பானதே. சில நேரங்களில் குழந்தைகளுக்கு வாந்தியுடன் வயிற்றுப் பொருமல், எரிச்சல், அழுகை, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற பல அறிகுறிகளும் தென்படலாம். இந்த அறிகுறிகள் தோன்றும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த நேரத்தில் என்ன விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும்? இதைப் பற்றிய சிறந்த தகவலுக்காக, லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸின் M.D மருத்துவர் டாக்டர் சீமா யாதவ் அவர்களிடம் பேசினோம்.
குழந்தைகள் ஏன் வாந்தி எடுக்கின்றனர்?
வயிற்றில் தொற்று, பால் ஒவ்வாமை, அதிக பால் குடிப்பது, ஏப்பம் விடாமல் இருப்பது மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள், இவை அனைத்தும் குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான முக்கிய காரணங்களாகும். குழந்தைகள் வாந்தி எடுக்கும்போது வயிற்றில் உள்ள தனிமங்கள் அதிவேகமாக வெளியேறும், இதனால் அவர்கள் பலவீனமாக உணர்ந்து, அழுகவும் செய்கின்றனர். வாந்தியெடுத்தபிறகு குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். குழந்தை சிறிய இடைவெளிகளில் தொடர்ந்து வாந்தி எடுத்தால் அல்லது வாந்தியில் இரத்தம் கலந்து வந்தால், குழந்தை இயல்பைவிட அதிகமாக அழுதால், குழந்தை அதிக சோர்வுடன் காணப்பட்டால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
குழந்தையை ஓய்வெடுக்க விடுங்கள்
குழந்தை வாந்தி எடுத்தால், வாயைச் சுத்தம் செய்தபிறகு குழந்தையை ஓய்வெடுக்க விடுங்கள். நன்றாகத் தூங்கினால் வயிறு சீராகும். உங்கள் குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் கொடுக்க வேண்டாம். குழந்தை தூங்கி எழுந்தவுடன், தாய்ப்பால் கொடுங்கள். வாந்தியெடுக்கும்போது, குழந்தையின் உடலிலிருந்து மதிப்புமிக்க திரவங்கள் வெளியேறி விடுகின்றன. அவற்றை மீண்டும் உடலுக்குள் கொண்டு வரத் தாய்ப்பால் அவசியம். இது குழந்தைக்கு ஆற்றலைத் தந்து வயிற்று வலியைப் போக்கிவிடும்.
புதிய, வெளிக்காற்று வரும் இடத்திற்கு தூக்கி செல்லுங்கள்
குழந்தையை புதுக்காற்று வரும் இடத்திற்கு அழைத்துச் செல்வது, அவர்களின் வயிற்றுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது. பயணத்தின்போது, புதிதாகப் பிறந்த ஒரு சில குழந்தைகளுக்குக் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் குழந்தையுடன் கார் அல்லது வேறு வாகனத்தில் பயணம் செய்வதாக இருந்தால், பயணத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே உங்கள் குழந்தைக்குப் பால் கொடுங்கள். பால் முறையாக ஜீரணமாகிவிட்டால் வாந்தி எடுக்கமாட்டார்கள்.
அதிக பால் புகட்ட வேண்டாம்
உங்கள் குழந்தை வாந்தி எடுப்பதை தவிர்க்க, தாய்ப்பால் கொடுத்தபிறகு ஏப்பம் விடச் செய்ய வேண்டும். ஏப்பம் விட்டபிறகு, உடனே மறுபடியும் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்திடுங்கள். சரியான இடைவெளிகளைப் பின்பற்றி தாய்ப்பால் கொடுக்கவும். குழந்தையின் தேவையைவிட அதிகமாக வயிறு நிரம்புவதாலும் வாந்தி எடுக்கின்றனர். உங்களின் தாய் பால் உற்பத்தி அதிகப்படியாக இருப்பது குழந்தைக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், இதற்கு மகப்பேறு மருத்துவ நிபுணரை அணுகவும்.
தாய்மார்களின் உணவுமுறை மாற்றங்கள்
தாய்ப்பாலை விடச் சிறந்த மருந்துக் குழந்தைக்கு இருக்க முடியாது. நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடிய சத்துக்கள், தாய்ப்பால் மூலமாகக் குழந்தையைச் சென்றடையும். ஆகையால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், ஒரு சில உணவு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது நல்லது. எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், அதிகமான மசாலாக்கள் சேர்ந்து சமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் வெளி உணவுகளைப் போதுமானவரை தவிர்த்திடுங்கள். அன்றாடம் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான புதிய உணவுகளைச் சாப்பிடுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அஜீரணம் ஏற்பட்டால் ஓமம் அல்லது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கலாம். தாய்மார்கள் இதைப் பின்பற்றுவது, குழந்தையின் வாந்தி பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
குழந்தை வாந்தி எடுப்பதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். குழந்தை அடிக்கடி வாந்தி எடுத்தால் மருத்துவரை அணுகவும்.
Images Credit: freepik