க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

  • SHARE
  • FOLLOW
க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

Green tea Benefits: க்ரீன் டீயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

கிரீன் டீயின் நன்மைகள்: கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகப் பரவியுள்ளது. சர்க்கரை சேர்த்த டீ, காபிக்கு பதிலாக, பலரும் க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.தங்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், சளி, காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து விலகி இருக்கவும், உடல் பருமனை குறைக்கவும், க்ரீன் டீயை குடிக்கிறார்கள்.க்ரீன் டீயில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது. இதில் நன்மைகள் ஏராளம் இருந்தாலும், பலருக்கு க்ரீன் டீயின் சுவை பிடிப்பதில்லை.

2 வருடங்களுக்கு முன்பு நான் கிரீன் டீயை முதன்முதலில் குடித்தப்போது, ​​​​அது மிகவும் கசப்பாகவும் சுவையற்றதாகவும் உணர்ந்தேன். இனி வாழ்நாளில் க்ரீன் டீ பக்கமே திரும்பக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். ஆனால், இப்போதோ என்னால் க்ரீன் டீ பருகாமல் இருக்க மூடியாது. ஒரு முறை எனது நண்பர் ஒருவர் தேன் கலந்த கிரீன் டீயைக் கொடுத்தார்.பின் ஒரு உணவகத்தில் இஞ்சி சேர்த்த கிரீன் டீ குடித்தேன்.இந்த இரண்டு சம்பவங்களும் க்ரீன் டீ மீதான எனது அபிப்ராயத்தை மாற்றியது.க்ரீன் டீயின் சுவையை மேம்படுத்த என்னவெல்லாம் சேர்க்கலாம் என்று நான் கற்றுக்கொண்ட விஷயங்களை உங்களுடன் பகிரப் போகிறேன். ஆரோக்கியமான க்ரீன் டீயை சுவையாக மாற்ற இந்தப் பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

கிரீன் டீயுடன் என்ன கலந்து குடிக்க வேண்டும்?

தேன் - க்ரீன் டீயுடன் தேன்

நீங்கள் க்ரீன் டீயின் சுவை கசப்பாக இருப்பதாக உணர்ந்தால், தேன் கலந்து குடுத்து பாருங்கள்.1 கப் க்ரீன் டீயுடன், ½ டீஸ்பூன் தேனை சேர்த்து குடியுங்கள். தேனின் இனிப்பான சுவை கிரீன் டீயின் கசப்பை குறைத்து, சுவையாக மாற்றுகிறது.இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பானமாக அமைகிறது.மேலும், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை - கிரீன் டீயுடன் எலுமிச்சை

கிரீன் டீயுடன் எலுமிச்சை கலந்து குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இது கொழுப்பை வேகமாகக் கரைக்கிறது. மேலும், இதைக் குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். இந்தப் பானத்தை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஒரு சிலருக்கு அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகையால் எலுமிச்சை கலந்த கிரீன் டீயை, காலை உணவுக்குப் பிறகு குடியுங்கள்.

துளசி - கிரீன் டீயுடன் துளசி

துளசியை கிரீன் டீயுடன் கலந்து குடிப்பதால் சளி, இருமல் மற்றும் பல வகையான பருவகால நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். கிரீன் டீ மற்றும் துளசி இலைகளைத் தண்ணீரில் சேர்த்து, கொதிக்க வைத்துக் குடிக்கலாம். இந்தச் செய்முறைக்கு க்ரீன் டீப்பைகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. துளசி சேர்த்த க்ரீன் டீயை மதிய உணவுக்குப் பிறகு அல்லது மாலையில் குடியுங்கள்.காலையில் குடிப்பதை தவிர்திடுங்கள்.

இஞ்சி - கிரீன் டீயுடன் இஞ்சி

இது குளிர் காலத்திற்கு ஏற்றப் பானமாகக் கருதப்படுகிறது. இஞ்சி மற்றும் க்ரீன் டீயில் உள்ள சத்துக்கள் உடலை உள்ளிருந்து வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது. இதனுடன் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம். 1 கப் கிரீன் டீக்கு, 1/2 டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்தால் போதுமானது. இஞ்சி சாறுக்கு பதிலாக நீங்கள் இஞ்சியை தட்டி அல்லது துருவி, கிரீன் டீ உடன் சேர்த்து கொதிக்க வைத்துப் பருகலாம்.

க்ரீன் டீ குடிப்பர்களுக்கான முன்னெச்சரிக்கைகள்

WebMD இன் அறிக்கையின்படி, க்ரீன் டீ அல்லது எந்தப் பானமாக இருப்பினும், அதைக் குறிப்பிட்ட அளவில் மட்டுமே குடிக்க வேண்டும். கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால் தலைவலி, வயிற்றுவலி, மலச்சிக்கல் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.சுகாதார நிபுணர்கள் பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் க்ரீன் டீயை விட அதிகமாகக் குடிக்க வேண்டாம்.

Images source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு